கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே குமராட்சி ஒன்றியத்திற்கு உடபட்ட தில்லைநாயகபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் அந்த பகுதியை சார்ந்த மாணவ மாணவிகள் 14 பேர் கல்வி பயின்று வருகிறார்கள்.
திங்கள்கிழமை காலை மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சற்றுமுன் பள்ளியின் வராண்டா மேல்தள சீலிங் ( மேல்தளகாரை) பெயர்ந்து விழுந்தது. மாணவ, மாணவிகள் அப்போது இல்லாததால் விபத்து ஏதும் நடைபெறவில்லை. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மீதியுள்ள பகுதி எப்பொழுது விழுமோ என்ற ஐயத்தில் மாணவர்கள் இந்த வராண்டாவை தாண்டி வகுப்பறைக்கு செல்கிறார்கள்.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து பள்ளி கட்டிடத்தை பழுது நீக்கவேண்டும். மேலும் வெளியாட்கள் உள்ளே வராதவாறு பள்ளிக்கு சுற்றுசுவர் அமைத்து தரவேண்டும். நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பயின்ற இப்பள்ளியில் தற்போது 14 மாணவ மாணவிகளே பயிலுகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களின் சேர்க்கையை அதிப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.