தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும், பாஜக அகில இந்தியப் பொதுச் செயலாளருமான சி.டி.ரவி ஒக்கலிக சமுதாய நிர்வாகிகளிடம் வாக்கு சேகரித்தார்.
இதற்காகப் போடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற சி.டி.ரவி, ஓ.பி.எஸ் மற்றும் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோருக்கு 'வேல்' வழங்கப்பட்டது.
இதையடுத்து சி.டி.ரவி பேசும்போது, ''நமது சமுதாயம் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இங்கு நான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன். அதுவும் எனது சகோதரன் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்க்காக வந்துள்ளேன். சாதரணமாக ஒரு கிராம ஊராட்சியின் தலைவராக இருப்பவர்களே பந்தா செய்யும் சூழலில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஒரு கட்சியன் தலைவர் என்ற உயரிய பதவிகளை வகித்தாலும் எளிமையாக இருந்து சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் சகஜமாகப் பழகுபவர் தான் ஓ.பி.எஸ். அதிமுக, பாஜக, பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கட்சிகள் நண்பன் போன்றது. அதேவேளையில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிரிகளாகும். இவர்கள் நமக்கு மட்டும் எதிரியல்ல, நமது கலாச்சாரம், கடவுளுக்கும் எதிரியாவர்.
அதிமுக – பாஜக கூட்டணியானது ஜனநாயகக் கூட்டணியாகும். இங்கு யார் வேண்டுமானாலும் தலைவர்களாகலாம். ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியானது ஒரு குடும்பத்தின் கீழ் செயல்பட்டு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே தலைவர்களாக உள்ளனர். தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், 10 ஸ்மார்ட் சிட்டிகள், 29 அம்ருத் சிட்டிகள் 1,03,000 கோடி ரூபாய்க்கு தேசிய ஊரகத்திட்டம், மதுரையில் எய்ம்ஸ் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்திய மோடி, பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500, விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தான் தமிழகத்தின் நண்பர்கள். ஆனால், திமுகவும், காங்கிரஸும் தமிழகத்திற்கு எதிரிகளாக உள்ளனர். அதுபோல், திமுக என்றால் கட்டப் பஞ்சாயத்து. தமிழகத்திற்கு கட்டப் பஞ்சாயத்தும் வேண்டாம், திமுகவும் வேண்டாம் என்றார். 2006 – 11 வரையில் நாளொன்றுக்கு 17 மணி நேரம் மின்வெட்டு இருந்த திமுக ஆட்சி மீண்டும் தேவையில்லை. மேலும், தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தது திமுக – காங்கிரஸ் அரசுகள். ஆனால், அதற்கான தடையை விலக்கிச் சட்டம் நிறைவேற்றித் தந்தது அதிமுக – பாஜக அரசுகள்.
ஜல்லிக்கட்டின் நாயன் ஓ.பி.எஸ் தான். தமிழர்களின் உண்மையான நண்பர்கள் மோடி, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தான். தமிழ்க் கலாச்சாரம் நாங்கள்தான் என திமுக நாடகம் ஆடுகிறது. ஆனால், சென்னை மாமல்லபுரத்திற்கு சீனப் பிரதமரை அழைத்துவந்து தமிழ்ப் பெருமையை அறியச் செய்தது மோடிதான். மேலும் ஜெயலலிதா – மோடி இருவருக்கிடையேயான உறவு அக்கா – தம்பி உறவு போன்றது. அக்காவின் ஆசீர்வாதம் அவரது தம்பிக்கு இருக்கிறது. எனவே அக்காவின் கனவை அவரது தம்பி நிறைவேற்றுவார். அதிமுக – பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றிபெறும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ''பொதுவாக ஒரு சுப நிகழ்ச்சிகளில் பூ, இலை மற்றும் பழம் ஆகிய மூன்றும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். அதுபோல, தற்போது இரட்டை இலை, தாமரைப்பூ மற்றும் மாம்பழம் ஆகிய 3 சின்னங்களையும் கொண்ட அதிமுக – பாஜக – பாமக கட்சிகள் இடம்பெற்றிருக்கும் இந்தக் கூட்டணி ஒரு அழகிய கூட்டணியாக உள்ளது. இந்த நேரத்தில் மோடியின் சின்னம்; தாமரை அல்ல, இரட்டை இலை. எனவே போடியில் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து ஓ.பி.எஸ்ஸை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். மேலும் தமிழ்க் கடவுளான முருகனையும், இந்து மதத்தையும் அவமதித்த திமுகவிற்கு இந்தத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்'' என்று கூறினார்.