16 ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உட்பட 10 அணிகள் விளையாடி வருகின்றன. மொத்தம் 70 லீக் போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.
எம்.எஸ்.தோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணிக்கு தமிழ்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ்நாட்டை தாண்டியும் இந்தியா முழுக்க எம்.எஸ். தோனிக்காக சி.எஸ்.கே. அணியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் கைத்தறி துணிநூல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய பா.ம.க. தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், “தமிழர்கள் அல்லாத சி.எஸ்.கே. அணியை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவர் கூட சி.எஸ்.கே. அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. ஆனால், தமிழர்கள் அணி போல் விளம்பரம் செய்து, தமிழக மக்களிடம் பெரும் வர்த்தக இலாபத்தை அந்த அணி பெறுகிறது” என்ற கோரிக்கையை வைத்தார்.