கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கி வருவது காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியாகும். மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரம் இதுவே ஆகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏரிக்கு மேட்டூரிலிருந்து வரும் தண்ணீரை கீழணையில் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மேலும் ஏரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளாக அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் பெய்யும் மழை காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்தடையும். இந்த நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததாலும், கடும் வெயில் காரணமாகவும் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் தண்ணீரின் அளவும் விநாடிக்கு 71 கன அடியிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை ஏரி வறண்டது. இதனால் சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. தற்போது ஏரி வறண்டு குறைந்த அளவு தண்ணீர் உள்ளது. அதாவது நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. இந்த நிலையில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பிட மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
கோடையை சமாளிக்க சென்னைக்கு என்எல்சி சுரங்க நீரை வாலாஜா ஏரியில் எடுக்கவும், வடலூர் முதல் பண்ருட்டி வரை உள்ள 100க்கும் மேற்பட்ட ராட்சத போர்வெல்களில் தண்ணீர் எடுக்கவும், நெய்வேலி சுரங்க நீரை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கவும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.