தள்ளாத வயதில் தான் வளர்க்கும் வாயில்லா ஜீவன்களுக்கு இரை தேடிப்போன இடத்தில் நடந்த கொடுமையால் ஆடுகளுக்கு சேகரித்த இலைக்கட்டுகளோடு 2 கி.மீ. தனது சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்த சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் நடராஜன். செவ்வாய் கிழமை மாலை தனது சைக்கிளில் வாங்கரிவாளோடு இலைக்கட்டுகளையும் கட்டிக்கொண்டு நடக்க முடியாமல் தள்ளிக்கொண்டு வந்தவரிடம் என்னங்கய்யா.. சைக்கிளை தள்ளிக்கிட்டு போறிங்களேனு கேட்டோம். அதற்கு, “அத ஏந்தம்பி கேக்குறே.. நமக்கு அரசாங்கம் இலவச அரிசி குடுக்குது, பசிய போக்கிடுவோம். நம்ம வளர்க்குற ஆடுகளுக்குப் பசிய போக்கணுமே.
அதுக்காக இலை, தழை தேட அம்புலி ஆத்துக்கரைக்கு வந்து ரோட்ல சைக்கிளை நிறுத்திட்டு வாங்கரிவாளோட மாங்குளம் அணைக்கட்டு வரை போய் செடி, இலை, தழை அறுத்துத் தூக்க முடியாம தூக்கிட்டு வந்து, சைக்கிள்ல வச்சுட்டு சைக்கிளை எடுத்தா யாருன்னே தெரியல சைக்கிள் செயினை அறுத்து எடுத்துட்டு போயிட்டானுங்க.
இதுவரைக்கும் தங்க நகை, தங்க செயினைத்தான் அறுத்துக்கிட்டு போயிட்டு இருந்தாங்க. ஆனா, இப்போ என் சைக்கிள் செயினை அறுத்துக்கிட்டு போயிட்டானுங்க. பாவம் அவ்வளவு வறுமை போலிருக்கு. அதனாலதான் இப்ப 2 கி.மீ. வீட்டுக்கு இலைக்கட்டோட சைக்கிளை தள்ளிக்கிட்டு போறேன்” என்றார்.