''நாட்டைக் காப்பாற்ற 2000 அடி உயரத்தில் பணியில் இருக்கிறேன். நிலப்பிரச்னையில் சிக்கித் தவிக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்,'' என்று சேலத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ஒருவர், காஷ்மீர் எல்லையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் உருக்கமான காணொளி பதிவை அனுப்பி உள்ளார்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அமரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (39). ஜம்மு-காஷ்மீரில் மத்திய பாதுகாப்புப்படை வீரராக (சிஆர்பிஎப்) கடந்த 19 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர், வாட்ஸ்அப் மூலமாக ஒரு காணொலி பதிவை அனுப்பி உள்ளார்.
அதில் அவர், தனது நிலத்தை வீடு அருகே உள்ள சிலர் ஆக்கிரமித்து நடைபாதையை அடைத்து விட்டதாகவும், இதுகுறித்து கேட்ட தனது தாய் மயிலாவை அவர்கள் தாக்கியதாகவும், இதனால் அவர் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் அன்பழகன் அந்த காணொளி பதிவில், ''நான் கடந்த 19 ஆண்டுகளாக நாட்டுக்காக 2000 அடி உயரத்தில் பணியாற்றி வருகிறேன். ஆனால் சொந்த வீட்டில் என் தாய் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இதுகுறித்து மேச்சேரி காவல்நிலையம், எஸ்பி அலுவலகம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் கொடுத்துவிட்டேன். இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த காணொளி பதிவை எல்லோருக்கும் பகிர்ந்து, என் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்,'' என்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் பலி, பாக் ராணுவத்திடம் இந்திய விமானி அபிநந்தன் கைது போன்ற பதற்றமான சூழ்நிலைகளில் சிஆர்பிஎப் வீரர் அன்பழகனின் காணொளி பதிவு மேலும் பரபரப்பையும் உருக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த காணொலி காட்சி, சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கர் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக அவர், காவல்துறை அதிகாரிகளை அமரம் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்த உத்தரவிட்டார். இது தொடர்பான விசாரணை அறிக்கை, எஸ்பி அலுவலகம் மூலமாக மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர் அன்பழகனின் தந்தை சின்னராஜூவுக்கும், அவருடைய தம்பி சாமியண்ணனுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. கடந்த 18ம் தேதி அன்பழகன் சேலம் வந்திருந்தார். அப்போது சாமியண்ணன் தன் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக அவருடைய பாக நிலத்தை சமன் செய்து கொண்டிருந்தார். சின்னராஜ் குடும்பத்தினர் செல்வதற்கான பாதையையும் ஒதுக்கிக் கொடுத்தார். ஆனால் அந்த நிலத்தின் நடுப்பகுதியில்தான் நடந்து செல்ல பாதை வசதி வேண்டும் என்று அன்பழகன் கேட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டது. இதனால் காஷ்மீர் சென்றுவிட்டு வந்த பின்னர் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று சென்றுவிட்ட அன்பழகன், அங்கிருந்து வாட்ஸ்அப் மூலம் இப்படி ஒரு காணொளி காட்சியை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அன்பழகனின் தாயாரிடம் விசாரித்தபோது, நீதிமன்றம் மூலமாக இந்த விவகாரத்தைத் தீர்த்துக்கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சிஆர்பிஎப் வீரர் அன்பழகனின் வாட்ஸ்அப் காணொளி பதிவும், மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.