விருதுநகர் மாவட்டம் - இராஜபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் 1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக பொருளதாரக் குற்றப்பிரிவு போலீசார் ஐந்து பேரைக் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆவின் துணைப் பதிவாளர் நவராஜ் தலைமையில் பால் கூட்டுறவு சங்கங்களில் கணக்கு தணிக்கை செய்யும் பணி நடந்தது. இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கக் கணக்கை தணிக்கை செய்தபோது, 2020-21ம் நிதியாண்டில் கூட்டுறவுச் சங்கப் பணம் ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் கையாடல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கின் சாராம்சம்: ஆர்.56 இராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு பால்வளத்துறையின் ஆணையாளர் அனுமதியின்றியும், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமலும், கூட்டுறவு சங்கங்களின் சட்டப் பிரிவு மற்றும் சங்கத் துணை விதிகளுக்கு முரணாகவும் 1-4-2020 முதல் 31-12-2021 வரையிலான காலகட்டத்தில் கையாடல் நடந்துள்ளது.
‘புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட வகையில் ரூ.25,76,434, தினசரி பத்திரிக்கைகளில் விளம்பரம் மற்றும் சங்கக் காலண்டர்கள் அச்சடித்து ரூ.15,13,553, கொரானா செலவுகள் என்ற தலைப்பில் தன்னிச்சையாகச் செலவு செய்த வகையில் ரூ.51,07,665, சங்கக் கட்டிடம், சங்கக் கிளை கட்டிடங்களுக்கு மின்சாதனங்கள் கொள்முதல் மற்றும் மின் பராமரிப்பு செய்த வகையில் ரூ.9,77,818, சங்கக் கட்டிடம், பால் கொள்முதல் மையங்களில் பராமரிப்பு செய்த வகையில் ரூ.7,30,049, சங்கப் பணியாளர்களுக்கு ஆணையர் அனுமதியை மீறி தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு ரூ.8,36,585’ என மொத்தம் ரூ.1,17,42,104 -ஐ சங்கப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றாகச் சேர்ந்து, கடமைகளையும் பொறுப்புகளையும் மீறி சங்கத்தை ஏமாற்றும் நோக்கத்தில் பொய்யான ஆவணங்களைத் தயார் செய்தும், அவற்றை உண்மையானதாகக் காட்டி பொய்க்கணக்கு எழுதி செலவுகள் செய்தும், சங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதனைத் தொடர்ந்து, சங்கப் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, விருதுநகர் மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவில் சங்க முன்னாள் அலுவலர்கள் மற்றும் நிர்வாகிகள் 8 பேர் மீது துணைப் பதிவாளர் நவராஜ் புகார் அளித்துள்ளார். விசாரணையில், இராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் 2020- 21-ஆம் நிதியாண்டில் கொரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தி, விழிப்புணர்வு விளம்பரம் செய்தல் என்ற பெயரிலும், இதர செலவு வகை கணக்குகள் அடிப்படையிலும் கூட்டுறவு சங்க நிதி ரூ.1 கோடியே 17 லட்சத்து 42 ஆயிரம் கையாடல் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க முன்னாள் மேலாளர்களான முருகேசன் , ராஜலிங்கம், பொறுப்புத் தலைவர் தங்க மாரியப்பன், கண்காணிப்பாளர் பன்னீர் செல்வம், காளிராஜ் ஆகிய 5 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அந்த ஐவரும் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளரும், அப்போதைய கூட்டுறவு சங்கத் தலைவருமான வனராஜ், மேற்பார்வையாளர் ஜெயவீரன் ஆகியாரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவா என்பவர் தலைமறைவாகிவிட, அவரைத் தேடி வருகின்றனர்.