கடலூரில் கனமழையால் நெற்பயிர்கள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், பெண்ணாடம், வடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் குறுவை நெல் சாகுபடிக்கான அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நலனுக்காக கடலூர் மாவட்டத்தில் 22 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், அறுவடை செய்த நெற்பயிர்களைச் சேமித்து வைக்க, இடம் இல்லாததால், சாலையோரம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவியல் குவியலாக விவசாயிகள் நெலமூட்டைகளைக் குவித்து வைத்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் சரிவு, மின்பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களில் பயிர் செய்து வந்த விவசாயிகள் கடந்த ஒரு வார காலமாக நெல் அறுவடை செய்து வரும் நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக இரவு நேரங்களில் பொழியும் மழையினால் நெற்பயிர்கள், அறுவடை செய்த நெல் மணிகள் நீரில் நனைந்துள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக விவசாயிகள் தங்களின் நெல் மூட்டைகளை வைத்திருந்த நிலையில், திடீர் மழையால் அனைத்தும் நனைந்து நாசமாகின. இதனால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் உள்ளனர். மேலும் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ள நெற்பயிர்களும் மழையினால் கதிர்கள் சாய்ந்தும், நெல் மணிகள் நிலத்திலேயே உதிர்ந்து முளைக்கட்டிய நிலையில் உள்ளதால் விவசாயிகளின் வேதனை அதிகரித்துள்ளது.
அதுபோல் அறுவடை செய்தபின் கிடைக்கக்கூடிய வைக்கோலை கால்நடை தீவனத்திற்காக விற்பனை செய்வது மூலம் அறுவடை செய்வதற்கான கூலியைச் சமாளித்து வந்த விவசாயிகள், தற்போது மழையினால் வைக்கோல்களும் நனைந்ததில் வேதனையின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.
தமிழக அரசு ஈரப்பதத்தைக் காரணம் காட்டாமல் அனைத்து நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும், அரசு அறிவித்த நெற்பயிர்க்கான ஆதார விலையை விவசாயிகளுக்குக் கிடைக்க ஆவண செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு உலர் களம் அமைத்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.