சென்னை, தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் மறைந்த பழம்பெரும் நடிகரான பாலையாவின் பேரன் பாலாஜி தங்கவேல். இவர், இன்று காலை அவரது வீட்டின் நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒன்றரை அடி நீளத்தில் ஏதோ தண்ணீரில் நீந்துவதைக் கண்ட அவர், நீச்சல் குளத்தில் இருந்த நீரினை முழுவதும் இரைத்துப் பார்த்த போது, அதில் இருந்தது முதலை எனத் தெரியவந்தது.
அதன்பின் பாலாஜி தங்கவேல், அதனை லாவகமாகப் பிடித்து பத்திரமாக பிளாஸ்டிக் கூடை ஒன்றில் பாதுகாப்பாக வைத்துவிட்டு, வனத்துறையினருக்குத் தகவல் அளித்தார். உடனடியாக வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களுடன் பாலாஜி தங்கவேல் வீட்டிற்கு விரைந்து வந்தனர். பிறகு அங்கு இருந்த அந்த முதலை குட்டியினை உயிரியல் பூங்காவிற்கு பத்திரமாக கொண்டு சென்றனர். அதேபோல், அங்கு ஒரு ஆமைக் குஞ்சியும் இருந்தது. அதனையும் வனத்துறையினர் மீட்டு எடுத்துச் சென்றனர்.
இது குறித்து பாலாஜி தங்கவேல் கூறுகையில், “இதுபோன்று எங்கள் நெடுங்குன்றம் ஏரிகளில் அதிக அளவில் மிகப் பெரிய முதலைகள் தற்போது உள்ளன. அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் முதலைக் குட்டிகளை இரைக்காக பறவைகள் கொத்தி தூக்கிக்கொண்டு பறக்கும் போது முதலைக் குட்டிகள் திமிறி பறவையின் பிடியில் இருந்து கீழே இதுபோன்று நீர் நிலைகளில் விழுவது உண்டு. முதலை வங்கியில் பராமரிக்கப்படும் முதலைகளை நான் ஒரு தன்னார்வலராக ஒரு மாத காலம் பயிற்சி பெற்றதன் அடிபடையில் இந்த முதலைக் குட்டியினை லாவகமாக பிடிக்க முடிந்தது. எங்கள் நெடுங்குன்றம் பகுதி ஏரியில் உள்ள மிகப் பெரிய முதலைகளைப் பிடிக்க வேண்டும்” என்ற கோரிக்கையையும் வைத்தார்.