Skip to main content

பட்டாசு வெடி விபத்தில் பெண்கள் உட்பட 5 பேர் பலி! - சிவகாசியில் தொடரும் சோகம்!

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

CRACKERS PLANT INCIDENT IN SIVAKASI EMPLOYEES POLICE

 

‘“அவங்களே திருந்திருவாங்க; கண்டுக்காதீங்க!” - அமைச்சரின் தலையீட்டைப் போட்டுடைத்த ஆட்சியர்!’ என்னும் தலைப்பில், பட்டாசு மரணங்கள் குறித்து நேற்று முன்தினம் (24-2-2021) நக்கீரன் இணையதளத்தில் சிறப்பு செய்தி வெளியிட்டு, ‘சம்பிரதாயமாகவே சகலமும் நடப்பதால், விபத்துகளும் உயிர்ப்பலிகளும், விதிமீறலால் தொடர்கின்றனவே!’ என்று வேதனையோடு குறிப்பிட்டிருந்தோம். இந்நிலையில், மீண்டும் பட்டாசு வெடிவிபத்தால் சிவகாசியில் உயிர்ச்சேதம் என்பது, மறுநாளே (25 பிப்.) நடந்திருப்பதுதான் கொடுமை! 

CRACKERS PLANT INCIDENT IN SIVAKASI EMPLOYEES POLICE

 

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலை முறைப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இதுதொடர்பாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நேற்று (25/02/2021) உத்தரவிட்டுள்ள நிலையில், இதே நாளில், சிவகாசி அருகே காளையார்குறிச்சியில், நாக்பூர் உரிமம் பெற்ற தங்கராஜ்பாண்டியன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு, 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

CRACKERS PLANT INCIDENT IN SIVAKASI EMPLOYEES POLICE

 

30- க்கும் மேற்பட்ட அறைகளில், 80- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஃபேன்ஸி ரக பட்டாசுகளில் மருந்து செலுத்தும்போது உராய்வு ஏற்பட்டு, இவ்வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், அருகிலுள்ள அறைகளுக்கும் தீ பரவ, அறைகள் தரைமட்டமாயின. வழக்கம் போல, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காயத்தின் சதவீதம் மிக அதிகமாக இருக்கும் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

CRACKERS PLANT INCIDENT IN SIVAKASI EMPLOYEES POLICE

 

கடந்த 12- ஆம் தேதி, அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், இதே மாதத்தில் திரும்பவும் வெடிவிபத்து ஏற்பட்டு, பட்டாசுத் தொழிலாளர்கள் 5 பேரின் உயிர் பறிபோனது, சோகத்திலும் சோகமே!

 

 

சார்ந்த செய்திகள்