இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் (மார்ச் 10-11) மாநிலக்குழுக்கூட்டம் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தோழர் என். சங்கரய்யா, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் உள்பட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் அதிகரித்து வரும் காவல்துறை தாக்குதலைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், கடந்த சில மாதங்களாக தமிழகக் காவல்துறை, பொது மக்கள் மீதும், போராட்டங்கள் நடத்துகிற மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குவது, பொய் வழக்கு போடுவது அதிரிகரித்து வருகிறது. பேருந்துக் கட்டண உயர்வு, நீட் தேர்வு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களை நடத்திய மாணவர் - இளைஞர் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்தது என்பதை தமிழக அரசு மறுக்க முடியாது. பெண்களும், குழந்தைகளும் காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளானது உண்மை. காவல்துறையினரே வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதும் மக்கள் கண்ட உண்மை. மார்க்சிஸ்ட் கட்சியினரும் காவல் துறையின் இத்தகைய அடாவடித் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் மார்க்சிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. ஆனாலும், ஜனநாயகத்தையும், போராடும் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன், திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ், கர்ப்பிணிப் பெண் உஷாவை உதைத்துத் தள்ளி கொலை செய்தது, மனிதத்தன்மையற்ற கொடுமை ஆகும்.
மேற்குறிப்பிட்ட வகையில் ஜனநாயக, சமூக, மனித உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும் காவல்துறையை ஒழுங்குபடுத்தவும், மேற்படி உரிமைகளை அரசியல் சட்ட உரிமைகள் என்ற முறையில் பாதுகாக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அதேநேரம் மேற்படி உரிமைகளை பாதுகாக்கிற வகையிலும், காவல்துறையின் அராஜகத்தை தடுத்து நிறுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தீவிர போராட்டங்களை முன்னெடுக்கும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.