Skip to main content

சென்னையில் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள் ! (படங்கள்)

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

 

''இரு நூறு கிலோமீட்டர் தூரம் என்றால்கூட நடந்தே போயிருப்போம்.ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை நாங்கள் எப்படி கடந்துபோவது?'' என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார், ஓரிசாவைச் சேர்ந்த இளம் தொழிலாளி ஹம்ரித்.

 

h

 



''திடீர்னு அறிவிச்சதால எங்களால போக முடியல. அப்படியும் இருபது அல்லது முப்பது பேரு கிளம்பிட்டாங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.கஷ்டம்தான். எப்படி போகும்ன்னு தெரியல.ஒன்னு வேலை நடக்கனும்.இல்லை ட்ரெயின் போகனும்.அதுவரைக்கும் இப்படிச் சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தூங்குவதுதான்'' எனத் தட்டுத்தடுமாறி தெரிந்த தமிழில் உரையாடுகிறார் ஹம்ரித். 


சென்னையின் கிழக்கு தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் மேம்பாலம் கட்டுமானப் பணிக்காகப் புலம்பெயர்ந்து வந்திருக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுள் ஒருவர்தான் ஹம்ரித்.இவருடன் மேற்குவங்கம், ஓரிசா, பீகார், ஜார்கண்ட் என வட மாநிலத் தொழிலாளர்கள் அறுபதுபேர் வரை தங்கியுள்ளனர். 

 

l




அறுநூறு ரூபாய் சம்பளத்திற்குத் தினம் பத்துமணி நேரத்திற்கும் மேலாக கடும் உழைப்பைச் செலுத்தக்கூடிய தொழிலாளர்கள் இவர்கள். தற்பொழுது தங்கியிருக்கும் அறுபது தொழிலாளர்களுள் பெரும்பாலோனோர் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.

 

l



பத்துக்குப் பத்து அளவில் சவுக்கு கம்புகளை நிறுவி, மேல்புறம் மட்டுமல்ல நாலாபுறமும் இரும்புத்தகட்டைக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கும் தற்காலிக அறைக்குள்தான் அனைவரும் முடங்கிக் கிடக்கிறார்கள். காற்றோட்டம் கடுகளவும் கிடையாது. மேலே தொங்கியபடிச் சுழலும் மின்விசிறி வெப்பக்காற்றை வாரி அறையெங்கும் வீசுகிறது.கரடுமுரடான கட்டாந்தரையில் படுத்துக்கிடக்கின்றனர் அத்தொழிலாளர்கள். 
 

 




இரும்புத்தகட்டால் வேயப்பட்ட குடியிருப்புக்குள் கொளுத்தும் வெயிலில் இருக்க முடியாமல் சாலையோர மர நிழல்களின் கீழாய் ஆளுக்கொரு திசையாய் சிதறிக்கிடக்கின்றனர். சிலர் கேரம்போர்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அதனருகே தொழிலாளர்கள் ஒருவர் மாற்றி ஒருவராகத் தங்களுக்குத் தாங்களாகவே முடிதிருத்திக் கொண்டிருந்தனர். வாட்சப், கைப்பேசி வழியே கொரோனா குறித்த செய்திகளைப் பார்த்ததாகத் தெரிவித்தாலும், முகக் கவசங்களோ, போதுமான இடைவெளியோ ஏதுமின்றி இயல்பாய் எப்போதும் போலவே அவரவர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். ஏப்ரல் 14-ந் தேதியுடன் நிலைமை சீராகும் என்றே நம்பிக்கொண்டிருக்கின்றனர். மே மாதம்வரை ஊரடங்கு நீட்டிக்கும் வாய்ப்பிருக்கிறது என்றபோது, அதிர்ந்துதான் போனார்கள்.
 

l




''வீட்டுக்கு அமவுண்ட் அனுப்பணும். மேஸ்திரி இன்னும் கொடுக்கல. லீவு நாளுக்குச் சம்பளம் போடுறதா சொல்றாங்க. எப்படித் தெரியல. மே மாசம் வரை இப்படியே எப்படி இருக்கிறது? திடீர்னு ட்ரெய்ன் ஆஃப் பண்ணிட்டதால நின்னுட்டோம்.மூனுநாள் ஆகும். ட்ரெய்ன் விட்டுச்சுன்னா ஊருக்குப் போய்டுவோம்'' என்கிறார் பீகாரைச் சேர்ந்த கிருஷ்ணன்.

 

k

 



''இவங்களுக்குச் சம்பளம் கொடுக்கச் சொல்லி கவர்மெண்ட்ல இருந்து சொல்லியிருக்காங்க.மேஸ்திரி கணக்குக்குப் போயிடும். அவரு பிரிச்சி கொடுத்திடுவாரு.டிபார்ட்மெண்ட்ல லிஸ்ட் கேட்டிருக்காங்க. நேத்தே கொடுத்திட்டோம்.ஆளுக்கு 15 கிலோ அரிசி புரவிசன்ஸ் கவர்மெண்ட் தரப்பிலேர்ந்து கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க. நாங்க வாங்கிக் கொடுத்திடுவோம்.சாப்பாட்டுக்கெல்லாம் ஒன்னும் பிரச்சினை ஆகாது.ஓனர் போன் பண்ணிச் சொன்னாரு, நான் எல்லாத்துக்கும் மாஸ்க் வாங்கி கொடுத்திட்டேன்.'' என்கிறார் மேம்பால பணியைச் செய்துவரும் ஆர்.பி.பி. கண்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தைச் சேர்ந்த சைட் அட்மின் ராஜாமுகம்மது.  
 

6


''டெய்லி அறுநூறு ரூபா சம்பளம்.வாரா வாரம் மேஸ்திரி கொடுப்பாரு.நாங்க இருநூறு முன்னூறு மட்டும் வாங்குவோம்.மிச்ச காசு மாசக் கடைசியில வாங்கி ஊருக்கு அனுப்புவோம்.கையில இருந்த காசு காலி ஆகப்போவுது.ரெண்டு மூனு ரூம் பசங்க சேர்ந்து சமைச்சி சாப்பிடுறோம்.இனி மேஸ்திரிகிட்ட காசு வாங்கித் தான் பொருள் வாங்கணும்'' என்கிறார் ஹம்ரித்.


சைட் அட்மின் சொன்னதைப்போல, வேலையின்றி முடங்கிக் கிடக்கும் நாட்களுக்கு அரசும் காண்ட்ராக்ட் நிறுவனமும் சம்பளம் வழங்க முன்வருமா? அவை இத்தொழிலாளர்களின் கைகளுக்குச் சென்று சேருமா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.அரசிடமிருந்து அரிசியும் பருப்பும் வந்தால் மட்டுமே இவர்களால் எஞ்சிய நாட்களைத் தாக்குப் பிடிக்க இயலும்? 
 

செய்தி, படங்கள் : இளங்கதிர்

 

சார்ந்த செய்திகள்