தமிழகத்தில் மக்களவை தேர்தல் பரபரப்பு முடியும் முன் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. நான்கு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில தலைவர் முத்தரசன். கள நிலவரம் குறித்து நம்மிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
தமிழகத்தில் நடைபெறும் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்திற்கு சென்றேன். அந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளான திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் எப்படி ஏப்ரல் 18 ஆம் தேதி மாற்றத்திற்கான முறையில் வாக்களித்தார்களோ, அதே போல் இந்த இடைத்தேர்தலிலும் தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர். அதனால் தமிழகத்தில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
திமுக வெற்றி பெற்றுவிடும் என்பதால்தான் எதிர்க்கட்சிகளின் மீது ஆளும் கட்சி அவதூறு பரப்புகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். இந்த சந்திப்பை திமுக தலைமை மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்த நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறி மோசமான முறையில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார் . ஆனால் மு.க.ஸ்டாலின் பாஜகவுடன் தனது கட்சி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதிப்படுத்தினால் அரசியலில் இருந்து விலகத் தயார் என தெரிவித்த பின்பு தமிழிசை தனக்கு வந்த தகவலின் படி கூறியதாகவும், காலம் வரும் போது நிரூபிப்பேன் எனவும் கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல்.
நடிகர் கமல்ஹாசன் இந்து மதம் குறித்து பேசியதை பாஜக சர்ச்சையாக்குகிறதா?
நடிகர் கமல்ஹாசன் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே குறித்துதான் பேசினார். காந்தி மதசார்ப்பின்மையை பின்பற்றியதால்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கோட்சேவுக்கு சிலை வைக்க பாஜக விரும்புகிறது. காந்தியின் நினைவு நாளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கோட்சேவை கொண்டாடினர். ஆனால் பிரதமர் அதைத் தடுக்கவில்லை. அதே போல் நாடு முழுவதும் கோட்சே சிலையை வைக்க ஆர்எஸ்எஸ் முயன்று வருகிறது.
ஒட்டப்பிடாரம் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலின், அங்கு தங்கவிருந்த விடுதியில் சோதனை நடத்தியதை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி எதிர்க்கட்சிகளின் மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களிடம் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே நேற்று ஸ்டாலின் தங்க இருந்த விடுதியில் சோதனை நடைபெற்றது. இதற்கு முன் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின்படி சோதனை நடத்தியதாகக் கூறினர். ஆனால் எத்தனை சோதனை நடைபெற்றாலும் திமுக வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியால் தடுக்க முடியாது.
’ராகுலை பிரதமர் வேட்பாளராக முன் மொழிந்ததற்காக திமுக வருத்தப்படும்’ என்றார் பாஜக மாநில தலைவர் தமிழிசை. நீங்கள் அதை எப்படி பார்க்கறீர்கள்?
மே 23 ஆம் தேதிக்குப் பிறகு தெரியும் யார் வருத்தப்படப் போகிறார்கள் என்று. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது ஐந்து ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசாமல், காங்கிரஸ் கட்சியின் குடும்பத்தை பற்றி மட்டுமே பேசி வருகிறார். இதனால் தமிழகத்திலும் , மத்தியிலும் கட்டாயம் ஆட்சி மாற்றம் நிகழும்.