ஆன்மீகவாதி போர்வையில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இந்த வழக்கு நேற்று (13.06.2021) சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், தற்போது விசாரணை துவங்கியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.
இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யபட்ட நிலையில், இந்த வழக்கு நேற்று சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.
சிவசங்கர் பாபா உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்படுவதற்கு முக்கியக் காரணம். வேறு மாநிலத்திற்குச் சென்று விசாரணை நடத்தக் கூடிய சூழ்நிலை இருப்பதால். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் பிரிவுகள் என மூன்று வழக்குகள் சிவசங்கர் பாபா மீது காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு வழக்கு, தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவிகளுக்கு வீடியோ சாட்டிங் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் மெசெஞ்சர் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சில ஆதாரங்களைப் போலீசார் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி அதிகாரியான காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலைமையில் விசாரணை தொடங்கியுள்ளது.