கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆடு, மாடுகளை பெருமளவில் வளர்த்து வருகின்றனர். இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெய்யும் மழையில் சோளம் பருத்தி போன்றவைகள் விதைத்து விவசாயம் செய்வார்கள். அவை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்து விடுவார்கள். அதன் பிறகு பறந்து விரிந்து கிடக்கும் விவசாய நிலங்களில் ஆடு மாடுகள் நாள் முழுவதும் தன்னிச்சையாக மேய்ந்து விட்டு மாலை வீட்டுக்கு வந்து விடும்.
அதன்படி அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி துரைசாமி மனைவி வள்ளி, கருப்பையா மனைவி அங்கம்மாள் ஆகியோருக்கு சொந்தமான பசு மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. அன்று மாலை வீடு வந்து சேரும் மாடுகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அங்கம்மாள் கணவர் கருப்பையா மாடுகளை தேடி காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது ஆலம்பாடி செல்லும் சாலை அருகே வாகையூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மாடுகள் தாண்டிச்செல்லும்போது 3 மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்து கிடந்தன. அதற்கு அருகில் இரண்டு குரங்குகள் மின்சாரம் தாக்கி அழுகிய நிலையில் இறந்து கிடந்தன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பையா ஊருக்குள் ஓடி வந்து தகவல் கூறினார். உடனே மாடுகளின் உரிமையாளர்கள் மாடுகள் இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மாடுகளும் குரங்குகளும் இறந்து கிடந்த காட்சி அவர்களில் கண்ணீர வரச் செய்தது.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் போலீசார் அப்பகுதி மின்சார வாரிய ஊழியர்கள் உடன் மாடுகள் குரங்குகள் இறந்து கிடந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மின்சார லைன் அருந்து கிடந்ததும் அதில் மின்சாரம் இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோடை காலம் என்பதால் விவசாய நிலப் பகுதிக்கு யாரும் மனிதர்கள் அதிகமாக நடமாடுவது இல்லை. அதனால் மின்சாரம் அறுந்து கிடந்தது மனிதர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. தற்போது மின்சார தம்பியை இழுத்துக்கட்டி சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மாடுகள் குரங்குகள் இறந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.