இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவந்த நிலையில், அதன் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது. ஊரடங்கு அமல், மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும், கரோனாவிலிருந்து பெரிதாக நம்மை காப்பதாக தடுப்பூசி பார்க்கப்படுகிறது. இதுவரை தமிழ்நாட்டில் பரவலாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதனை தமிழ்நாடு அரசும், தன்னார்வல அமைப்புகளும் ஆங்காங்கே தடுப்பூசி முகாம்களை அமைத்து மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரம்படி கோவிஷீல்டு மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் அரசால் ஒதுக்கப்படும் தடுப்பூசியாகவும் உள்ளது. முன்னதாக கோவாக்சின் முதல் தவணை செலுத்திக்கொண்ட பலரும் தற்போது இரண்டாவது தவணையை செலுத்திக்கொள்ள முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகியுள்ளது. கோவாக்சின் மருந்து கடந்த சில வாரங்களாகவே திருச்சி மாவட்டத்திற்கு வரவில்லை எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திய 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தவணையை செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், முதல் தவணை செலுத்திய 18 வயதற்கு மேற்பட்டோரும், 45 வயதுக்கு மேற்பட்டோரும் இரண்டாம் தவணை கிடைக்காமல் அவதிக்குள்ளாகிவருகின்றனர். மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் வருகைக்காக எதிர்பார்த்திருக்கின்றனர்.
எனவே கோவாக்சின் தடுப்பூசியும் தேவைக்கு ஏற்றார்போல் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், அரசு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேவேளையில் இன்று (02.07.21) திருச்சி மாவட்டத்திற்கு 23 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.