நீர், நிலம், காற்று மக்களின் வாழ்வாதாரத்தின் இந்த மூன்று மூலக்கூறுகளையும், மாசுபடுத்தி பெரும்பான்னையான மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தது மட்டுமல்லாமல், பலரையும் ஊனமாக்கியது தூத்துக்குடியில் அமைந்திருக்கிற வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை.
அதனை அகற்ற நகரின் மக்கள் முழுவீச்சுடன் 100 நாட்கள் போராடிய கடைசி நாளின்போது தன்னெழுச்சியாகவே மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்றனர். அந்த சமயம் ஏற்பட்ட கலவரம் காரணமாக மாணவி, சிறுவர் உட்பட 13 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமுற்றனர். அவர்களில் ஊனப்படுத்தப்பட்டு வாழ்க்கையை இழந்தவர்களும் உண்டு. அதுதொடர்பாக ஒரு நபர் நீதிபதி கமிஷன் சி.பி.ஐ. என விசாரணை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஒருபுறம் விசாரணையும் நடந்து வருகிற நிலையில், ஸ்டெர்லைட் தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப விசாரணை நடத்திய சென்னை உயர்நீதின்றம் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு அனுமதியில்லை என்று தீர்ப்பளித்தது.
நீதிமன்ற தீர்ப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது, பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியோடு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றனர்.
இந்த நிலையில் ஸ்டெர்லைட்டின் முதன்மை செயல் அலுவலரான பங்கஜ்குமார் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார், “ஸ்டெர்லைட் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் காப்பர் தேவையில் 40 சதவிகிதம் உற்பத்தி செய்து வந்தோம். ஒரு லட்சம் மக்களின் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளது. அரசு, தொழிற்சாலைகளைத் துவங்குவதை ஊக்குவிக்கும் நேரத்தில் எங்களைப் போன்ற ஆலைகளை மூடு நேரிடகிறது” என்றார். பேட்டியின் போது ஸ்டெர்லைட் ஆலையின் பிற அதிகாரிகள் உடனிருந்தனர்.