மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோ மேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், சிலருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் ஏராளமான வழக்குகள் தாக்கல் ஆகின.
இந்த வழக்குகள் அனைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி தண்டபானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ‘நிதி நிறுவனங்களில் ஆசை வார்த்தையை நம்பி 3.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில், 11,709 பேர் மட்டுமே தங்களுடைய முதலீட்டுகளை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும். தங்களிடம் முதலீடு செய்தவர்களின் விபரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், சொத்துக்கள் ஆகிய முழு விவரங்களையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் வழங்க வேண்டும்.
அதே போல், பாதிக்கப்பட்டவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக முழுவதுமாக அறியும் வகையிலும், மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யும் விதமாகவும் பரந்த அளவில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்களை பெறுவதில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முனைப்பு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து புகார்களை பெற்று, இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.