ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நாள் அமைச்சர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை ஈரோட்டில் முகாமிட்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் எனக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஈரோடு கிழக்கில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 107 பணிமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 42 பணிமனைகள் அந்தந்த கட்சிகளே அகற்றிவிட்டனர் எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் குறித்தான புகார்கள் மீது தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கூடுதல் பறக்கும் படைகளை பணியமர்த்த வேண்டும். கண்காணிப்பு கேமரா, வெப் கேஸ்டிங் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி எழுப்பியுள்ள புகார் மற்றும் கோரிக்கை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.