அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்ட நிலையில் அவர்க்கு பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 4 மணிக்கு சூலூரை சேர்ந்த காவலர்கள் 10க்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் முடிவில் அவரை கைது செய்த காவல்துறையினர், சூலூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி, தான் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறி, அதிமுக தலைவர்கள் பலரை விமர்சித்து பேசியதாக சூலூரைச் சேர்ந்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்றத் தலைவரான கந்தவேல் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னும் அதிமுகவின் கொடி, லெட்டர் பேட், இணையத்தளத்தில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தி அதிமுகவில் உள்ளதுபோல தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை பிப்.7 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து அவரை கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவர் நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் நாடாளுமன்ற எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார் என்பதும் காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.