விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 50). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையை ஒட்டி இளையபெருமாள் என்பவர் நிலத்தை விலைக்கு வாங்கிய அதே ஊரைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரும் விவசாயம் செய்து வந்தனர். பெட்டிக்கடை ஜெயபால் தங்கள் நிலத்தில் குப்பையை கொட்டி நாசம் செய்வதாக இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி பெட்டிக்கடை ஜெயபாலின் மகளான 15 வயது சிறுமி முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் கெட்ட வார்த்தையில் திட்டியதால் சிறுமி மீது ஏற்பட்ட கோபத்தில் சிறுமியை கொலை செய்ய முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி கலியபெருமாள் மற்றும் முருகனின் உறவினர் பிரவீன் குமார் என்பவர் ஜெயபால் பெட்டிக்கடைக்குச் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஜெயபாலின் மகன் ஜெயராஜிக்கும் பிரவீன் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ் மீது பிரவீன் குமார் தாக்குதல் நடத்தியதால் படுகாயம் அடைந்த ஜெயராஜை அவரது குடும்பத்தினர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து மறுநாள் (10.05.2020) 15 வயது சிறுமி மட்டும் பெட்டிக்கடையில் தனியாக இருந்துள்ளார். அதைப் பயன்படுத்திக் கொண்ட முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன் சென்று சிறுமியின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி அப்போது அளித்த மரண வாக்குமூலத்தில், "முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் தனது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சிகிச்சை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ், சிறுமியை தீ வைத்து எரித்து கொலை செய்த குற்றத்திற்காக கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கீதா ஆஜராகி வாதாடி இருவருக்கும் தண்டனை பெற்று தந்துள்ளார். சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.