விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கொடுத்து 25 சாப்பாடு பார்சல் வாங்கியுள்ளார். இந்தச் சாப்பாட்டில் 11 வகையான உணவுப் பொருட்கள் இருப்பதாக ஹோட்டல் நிர்வாகம் கூறியிருக்கிறது. அதனை நம்பி ஆரோக்கியசாமியும் சாப்பாட்டை வாங்கிச் சென்றுள்ளார்.
பின்னர் சாப்பாட்டைப் பிரித்துப் பார்க்கும் போது ஊறுகாய் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த ஆரோக்கிய சாமி சம்பந்தப்பட்ட ஹோட்டலை அணுகி ஊறுகாய் குறித்துக் கேட்டிருக்கிறார். அதற்கு ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமாகப் பதில் கூற ஆத்திரமடைந்த ஆரோக்கிய சாமி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றம், சாப்பாட்டுடன் ஊறுகாய் தராமல், ஆரோக்கியசாமியை மன உலைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறி ஹோட்டல் நிர்வாகத்திற்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தது. அத்துடன் மனுதாரருக்கு ஊறுகாய்க்கு உரியத் தொகையான ரூ.25 வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
மேலும் 45 நாட்களுக்குள் பணத்தைக் கொடுக்காவிட்டால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் அபராதத் தொகையையும் சேர்த்து வழங்கவேண்டும் எனக் கூறியுள்ளது. ஊறுகாய் வைக்காமல் நுகர்வோரிடம் அலட்சியமாக நடந்துகொண்ட ஹோட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மற்ற ஹோட்டல் நிர்வாகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.