கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி நாடு முழுவதும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அமைப்பினர் சோதனை நடத்தினர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மத்திய உளவுத்துறையால் பலரும் கைது செய்யப்பட்டனர். அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவன் அனாஸ் அலியும் ஒருவர். அவரை நீதிமன்ற உத்தரவுப்படி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 15 தினங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து காவலை நீட்டிக்கின்றனர்.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நவம்பர் 17 ஆம் தேதி ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர் படுத்தினர். இவரை வெளியே விட்டால் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் எனக் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மீண்டும் அடுத்த மாதம் 1 ஆம் தேதி ஆஜர்படுத்தும்படி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தீபாவளியின்போது கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிரவாதத் தொடர்பு என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் மீது தீவிரக் கண்காணிப்பை செலுத்தி வருகின்றன புலனாய்வு அமைப்புகள்.