போக்குவரத்துத் துறையில், சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடினர். அப்போது நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்திருந்தனர். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே இரண்டு முறை செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக கடந்த ஜனவரி 12 ஆம் தேதி மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி 2 வது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
அதே சமயம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜனவரி 29 ஆம் தேதி வரை 16 வது முறையாக நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.