Skip to main content

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு நீதிமன்றம் தடை! மீறி போராடுவார்களா தொழிலாளர்கள்!?

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய பகுதிகளில் பல ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பஞ்சப்படி, வீட்டு வசதி, மருத்துவ சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவை என்.எல்.சி நிர்வாகம் செயல்படுத்தவில்லை.

 

Court bans NLC contract workers' strike Workers


இந்நிலையில்  தொ.மு.ச,  சி.ஐ.டி.யு,  பா.தொ.ச, தொ.வா.ச, ஐ.என்.டி.யூ.சி, தொ.வி.மு, இண்ட்கோசெர்வ் சங்கம்  உள்ளிட்ட 7 சங்கங்களை சேர்ந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் நிர்வாகத்துடன் நீண்டநாள் கோரிக்கை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும், கோரிக்கைகளை என்.எல்.சி நிர்வாகம்  ஏற்காததால் கடந்த 11.02.2020 அன்று  என்.எல்.சி  நிர்வாகத்திடம் வேலை நிறுத்த அறிவிக்கை  வழங்கினர். என்.எல்.சி நிர்வாகம் வருகின்ற 25-ம் தேதிக்குள்  தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் கோரிக்கைகளை  ஏற்காவிட்டால் 25 -ஆம் தேதி நள்ளிரவு பணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். இதேபோல் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பிலும் வேலை நிறுத்த அறிவிக்கை அளிக்கப்பட்டது.

அதையடுத்து மத்திய உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் புதுச்சேரியில் என்.எல்.சி அதிகாரிகள்,  தொழிற்சங்க கூட்டமைப்பினருடன் கடந்த 19-ஆம் தேதி முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று ஏ.ஐ.டி.யுசி  ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினை உதவி தொழிலாளர் நல ஆணையர் பேச்சுவார்த்தைக்கு  அழைப்பு அனுப்பப்பட்டிருந்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால் அதிருப்தியடைந்த ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் 480 நாட்கள் பணிபுரிந்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்திட வேண்டும், ஒரே வேலையை செய்திடும் தொழிலாளர்களுக்கு இருவேறு ஊதியம் வழங்குவதை தவிர்த்து சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.

 

Court bans NLC contract workers' strike Workers

 

இதனிடையே வேலை நிறுத்தத்திற்கு தடைவிதிக்க என்.எல்.சி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகியது. அதன் பேரில் வேலை நிறுத்தத்தை தொடங்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தை மூலம் சமரச தீர்வு காண வேண்டும் என்றும், வேலை நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் உதவி தொழிலாளர் நல ஆணையரும் தொழிற்சங்கங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதேசமயம், ‘ என்.எல்.சி நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களின்   நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதிலும் அக்கறை காட்டுவதில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என இழுத்துக்கொண்டே, மற்றொரு புறம் நீதிமன்றம் மூலம் போராட்டத்துக்கு தடை வாங்குவதை என்.எல்.சி நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. இந்த தடை ஆணையை சட்ட வல்லுனர்களின் உதவியுடன் எதிர் கொள்வோம். 25-ஆம் தேதிக்குள் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் திட்டமிட்டபடி வேலை  நிறுத்தத்தில் ஈடுபடுவோம்’ என்கிறார் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக ஒருங்கிணைப்பாளர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்கும் நிலையில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கான மின் விநியோகம் பாதிக்கப்படும்.

 

 

 

சார்ந்த செய்திகள்