கோவையில் கடந்த 2019ஆம் ஆண்டு 7 வயது சிறுமிக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. அதைக் கண்டு அச்சமடைந்த பெற்றோர், மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்தனர். அப்போது, சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. தகவலறிந்த கோவை மாநகர் மேற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மீன் பிடிக்கும் வேலை செய்துவரும் செந்தில் பிரபு என்பவன், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
அதனையடுத்து செந்தில்குமார் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைதுசெய்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்கவும் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை பெற்ற செந்தில்குமார் மீது கோவை மாநகரக் காவல் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.