திருச்சி ஸ்ரீரங்கம் பேரூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் – தேன்மொழி தம்பதியினரை். இருவரும் இன்று (01.02.2021) திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில், ‘கடந்த 1996-ஆம் ஆண்டு மாவட்ட கலெக்டரால் 2 செண்ட் அளவுள்ள இலவச காலி மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்கு ஆடுகள் வளர்ப்பதற்காக ஆட்டு கொட்டகை அமைத்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் 2008-ம் ஆண்டு கருப்பண்ணனின் மூத்த மகள் திருமணத்திற்காக, இந்த வீட்டு மனை பட்டாவை அடமானம் வைத்து அப்பகுதியைச் சேர்ந்த ஜோதிவேல் என்பவரின் மனைவி கஸ்தூரியிடம் 15ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தோம்.
இதற்காக மாதம் மாதம் வட்டியும் செலுத்தி வந்தோம். கடன் தொகையைத் திருப்பி செலுத்தி வீட்டுமனை பட்டாவை வாங்க சென்றபோது, என் பெயருக்கு மாற்றி எழுதி கொடு இல்லையேல், உன்னையும் உன் ஆடுகளையும் தீ வைத்து எரித்துக் கொன்றுவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஜீயபுரம் காவல் நிலையத்தில் ஜோதிவேல் மீது புகார் அளித்துள்ளோம். இந்நிலையில் ஜோதிவேல் அவரது தம்பி மற்றும் அடியாட்கள் ஆகியோர் வந்து எங்கள் இருவரையும் தாக்கி வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டனர்.
இது தொடர்பாக எஸ்பி அலுவலகத்திலும், கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் காலி மனை பட்டாவை ஜோதிவேல் தங்கை பெயருக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது குடியிருந்த வீட்டை இடித்துவிட்டனர். வாழ வழியின்றி இருக்கும் எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனு கொடுக்க வந்த அவர்களை போலீசார் சோதனை செய்ய முயற்சித்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து அவர்களின் மீது ஊற்றிக்கொள்ள முயன்றனர். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அதனைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து மனு அளிக்க உள்ளே அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.