சேலம் மாவட்டம் நங்கவள்ளி காட்டுவலவைச் சேர்ந்தவர் சித்ரா. இவருடைய குடும்ப நண்பர் பசுவராஜ். இவர், வீரக்கல்புதூர் அருகே உள்ள கோனூரைச் சேர்ந்தவர். இவருடைய மனைவி ஜானகி. இவர்கள் சித்ராவிடம் கைமாற்றாக அவ்வப்போது கடன் வாங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீட்டு உபயோகப் பொருள்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று சித்ராவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதில் மயங்கிய சித்ரா, தன்னையும் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளச்சொல்லி அவர்களிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் பசுவராஜ் தம்பதியினர் வீட்டு உபயோகப் பொருள்களை இறக்குமதி செய்யும் தொழிலைச் செய்யவில்லை. சித்ராவிடம் பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதையடுத்து சித்ரா, சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் பசுவராஜ், ஜானகி ஆகியோர் மீது புகார் அளித்தார். மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த தம்பதியினரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் 6வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், கணவன், மனைவி இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.