சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி, லால் பகதூர் சாஸ்திரி சிலையைத் திறந்து வைத்தார்.
இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கலச் சிலையினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனில் திறந்து வைத்தார். ஆளுநரால் திறந்து வைக்கப்பட்ட லால்பகதூர் சாஸ்திரியின் சிலை 9.5 அடி உயரம் உடையதாகவும் 850 கிலோ எடை கொண்டதுமாகும். 15 லட்சம் செலவில் இந்த வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பின் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “லால் பகதூர் சாஸ்திரியைப் பொறுத்தவரை மிக எளிமையாக வாழ்ந்தவர். பொதுவாழ்வுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். நமது நாட்டின் தேவை மற்றும் நமது நாட்டின் மீதான பார்வை ஆகியவற்றின் மீது மாற்றத்தைக் கொண்டுவந்தவர்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது நாடு அமைதியை விரும்பியது. அமைதி வழியில் இருக்க வேண்டும் என்று நாட்டின் ராணுவத்திற்கு தேவையான விஷயங்களை செய்யவில்லை. இதற்காகப் பல பகுதிகளை இழந்தோம். இருந்தும் எதிரிகள் நமது நாட்டின் பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர்” எனக் கூறினார்.