ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில், கவுண்டம்பாளையம் சக்தி நகர் காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் பெருந்துறையில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சிசிடிவி கேமரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாகத் தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டுப் படுத்தப் படுக்கையாகக் கிடந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ளகோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார். பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மூதாட்டி தங்கியிருந்த வீடு ஓலை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு மளமளவெனத் தீப்பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.