சேலத்தில், கொசு மருந்து கொள்முதல் செய்ததில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இங்கு திருஞானம் என்பவர் கடந்த 2014-2015- ஆம் ஆண்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். மாவட்டம் முழுவதும் உள்ள 385 கிராம ஊராட்சி பகுதிகளிலும் நோய்த்தடுப்பு பணிகளுக்காக கொசு மருந்து அடிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இப்பணிகளுக்காக கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அப்போது புகார் எழுந்தது.
அதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பேரூராட்சிகளின் இயக்குநரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், அவரின் அனுமதி பெறாமலும் கொசு மருந்து வாங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கொசு மருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனம் அங்கீகாரம் பெறாமல் இருந்ததும், தரமற்ற மருந்தை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.
இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திருஞானம் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மீது இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்ததன்பேரில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல் சேலத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், கொசு மருந்து கொள்முதலில் முறைகேடு குறித்த புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, உதவி இயக்குநர் திருஞானம், செயல் அலுவலர் நாகராஜன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், கெமிக்கல் நிறுவன உரிமையாளர் கோபிநாத் ஆகிய நால்வர் மீதும் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்பட 12 பிரிவுகளின் கீழ் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.