விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது துத்திப்பட்டு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகன் வாசு(21). அதே ஊரை சேர்ந்தவர் சுகுமார்(27) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வாசுவின் செல்போனை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். மறுநாள் சுகுமார், வாசுவின் தந்தை கண்ணனிடம் சென்று உங்கள் மகன் வாசு தனது செல்போனை என்னிடம் ஆயிரம் ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். பணத்தைத் தந்துவிட்டு செல்போனை வாங்கி செல்லவில்லை. எனவே உங்கள் மகனுக்கு பதிலாக நீங்கள் எனக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு உங்களது மகனின் செல்போனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அதற்கு கண்ணன் என்னிடம் தற்போது பணம் இல்லை பணம் வரும்போது கொடுத்துவிட்டு செல்போனை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பணம் தராமல் கண்ணன் காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுகுமார் மதுபோதையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை என்பவரது வீட்டு திண்ணையில் இரவில் வாசுவின் தந்தை கண்ணன் படுத்து தூங்குவது வழக்கம். கண்ணன் தான் செல்லத்துரை வீட்டு திண்ணையில் படுத்துத் தூங்குகிறார் என நினைத்து அந்தத் திண்ணையில் படுத்திருந்த நபரை சுகுமார் உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் அங்கு படுத்திருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுத்து தூங்கியவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 65 வயது ஆறுமுகம் என்பது தெரியவந்தது. கண்ணன் என நினைத்து சுகுமார் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் அனந்தபுரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக செஞ்சி டி.எஸ்.பி இளங்கோவன் மற்றும் போலீசார் நேரில் சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கொலை செய்த சுகுமாரை கைது செய்துள்ளனர். கண்ணனுக்கு பதில் ஆறுமுகத்தை அடையாளம் தெரியாமல் சுகுமார் மதுபோதையில் அடித்து கொலை செய்த ஆள் மாறாட்ட கொலை சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.