திண்டுக்கல் மாநகராட்சி கமிஷ்னராக மகேஸ்வரி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்று செயல்பட்டு வருகிறார்.
மகேஸ்வரி, திண்டுக்கல்லுக்கு முன் காஞ்சிபுரத்தில் பணியாற்றினார். அப்போது, 2020 - 2021 காலகட்டத்தில், கொரோனா தடுப்புப் பணிகளுக்கான கிருமிநாசினி கொள்முதலில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி என்பவர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் இந்தப் புகாரை கொடுத்தார். அந்தப் புகாரை ஏற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியது. அந்த விசாரணையில், கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ரூ. 32 இலட்சத்து 40 ஆயிரம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது.
இந்நிலையில் அவர் பணி மாறுதல் பெற்று காஞ்சிபுரத்தில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி கமிஷ்னராக செயல்பட்டுவருகிறார். இன்று காலை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் காலை 7.30 மணி முதல் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் அமைந்துள்ள மகேஸ்வரி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மகேஸ்வரிக்கு திருப்பூரிலும் ஒரு வீடு உள்ளது. அங்கேயும், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய துப்புரவு ஆய்வாளர்களின் வீடுகள் உள்ளிட்ட ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.