Skip to main content

சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆயுர்வேதம் படித்தவரை நியமித்தது ஏன்?- மத்திய அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020

 

CORONAVIRUS SIDDHA MEDICINE TREATMENT GOVERNMENT CHENNAI HIGH COURT

 

சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவத்திலேயே தகுதியான நபர்கள் இருக்கும்போது, ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை  எதிர்த்து அவரது தந்தை கலியபெருமாள்   ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்திற்கு குறைவான நிதி ஒதுக்கப்படுவது  ஏன் என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் கனகவள்ளி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

அதில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவ முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில், அதன் எல்லையோர மாவட்டங்களில் மட்டுமே சித்த வைத்திய முறை பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் ஆயுர்வேதத்திற்கு 31 ஆராய்ச்சி நிறுவனங்களும், சித்த மருத்துவத்துக்கு 8 ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்ளன. மருத்துவ முறையை தேர்ந்தெடுக்கும் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே,  இந்திய மருத்துவ முறை துறைகளுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது.

 

சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில்,  கடந்த 2010- ஆம் ஆண்டு, சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.  தற்போது, சித்த மருத்துவத்துக்கு தே திருப்பதி, பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய ஆராய்ச்சி பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.

 

ஆயுஷ் அமைச்சகம், கரோனா ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ துறை பிரிவுகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கு தலா 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

 

இதையடுத்து, சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவத்திலேயே தகுதியான நபர்கள் உள்ளபோது, ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன் என்பது குறித்தும், சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியைக் கலைத்தது ஏன் என்பது குறித்தும், மத்திய அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்