கரோனா தடுப்பு பணிகள் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல பகுதிகளில் வேகமெடுத்தாலும்,முக்கிய நகரமான சங்கரன்கோவில் தாலுகா, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடுப்பு பணிகளில் தொய்வு என்று வந்த புகாரின் அடிப்படையில் தென்காசி மாவட்ட ஆட்சியரான அருண்சுந்தர் தயாளன் நேற்று (03/04/2020) மதியம் சங்கரன்கோவில் பகுதியில் திடீரென ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவிலின் மார்க்கெட் பகுதி மற்றும் அரசு மருத்துவமனைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவரிடம், நிருபர்கள், சங்கரன்கோவில் பகுதிகளில் கிருமிநாசினி இரண்டு நாட்கள் மட்டுமே தெளிக்கப்பட்டது.பின்னர் பணி நடக்கவில்லை.உழவர் சந்தையில் மக்கள் காய்கறிகளை வாங்கும் வேளையில் பின்பற்ற வேண்டிய சமூக இடைவெளிக்கு வகை செய்யவில்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அவைகளைச் சரிசெய்வதாக தெரிவித்த ஆட்சியர், மாவட்டத்தின் நிலவரங்களைப் பற்றித் தெரிவித்து, புகார் வந்துள்ள இடங்களை நேரில் ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து தாலுகா அலுவலகம் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.அப்போது கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளை அறிவுறுத்தினார்.