கரோனாவை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா? என ஆய்வு செய்யக்கோரிய மனுவுக்கு, மத்திய- மாநில அரசுகளும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸுக்கு 18 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், 700 பேர் இந்நோயின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நோயை குணப்படுத்த இதுவரை மருந்தோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உத்தரவிடக்கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், சித்த மருத்துவத்தில் வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ரசேந்துரம், அரிதாரம், கேஷ்டம் உள்ளிட்ட ஒன்பது வகை மூலிகைகளை சேர்த்து மருந்தாக சிறிது அருந்தினாலே, அனைத்து வகையான வைரஸ்களும் அழிக்கப்பட்டுவிடும். சித்த மருத்துவ முறையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த முடியுமா என பரிசோதிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு மனுக்கள் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலாளர்களும், ஆயுஷ் அமைச்சக செயலாளரும், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, உத்தரவிட்டுள்ளது.