தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட பத்திரிகையாளர்களுடன் கரோனா நோய்ப் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் மக்கள் மரண பயத்தில் வாழவேண்டிய சூழல் நிலவுகிறது. தொடரும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர் வர்க்கத்தினர், வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் 1,000 ரூபாய் நிவாரண நிதியையும், இலவச அரிசியையும் வைத்துக் கொண்டு குடும்பச் செலவுகள், மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட மற்ற செலவுகளைச் சமாளிக்க முடியுமா? எனவே பல்வேறு வகையிலும் துயரத்திற்கு ஆளாகியுள்ள மக்களுக்கு அரசு உடனடியாக ரூபாய் 5,000 நிவாரண உதவி வழங்க வேண்டும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக பத்தாயிரம் வரை கூட கொடுத்திருப்பார்.
வைரஸ் தாக்கத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துகிற வகையில் அனைத்து கிராம, நகர, பேரூராட்சி பகுதிகளிலும் சிகிச்சை முறையைத் தீவிரப்படுத்த வேண்டும். மக்களை நாடி மருத்துவர்கள் செல்லவேண்டும். கிராமங்கள் தோறும் முகாம்கள் நடத்த வேண்டும். அது மட்டுமின்றி நகர, பேரூர், ஊராட்சி, கிராமப் பகுதிகளில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளின் கருத்துகளைக் கேட்டறிந்து ஒருமனதாகச் செயல்பாட்டை நிறைவேற்ற வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் தவறவிட்டதால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அரசு செய்ய வேண்டியதை தி.மு.க முன்னின்று மக்களுக்குச் செய்து வழிகாட்டி வருகிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி நிதியும் வைரஸைக் கட்டுப்படுத்த வழங்கப்படுகிறது. இவை எந்த வகையில் செலவாகிறது என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்க வேண்டும் " என்றார்.