உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ், தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124ல் இருந்து 234 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,103 பேர் தாமாக முன்வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளதாகவும், இதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தானாக முன் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று பீலா ராஜேஷ் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.