தமிழகத்தில் நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கோழிப்பண்ணைத் தொழில் கொடிகட்டி பறக்கிறது. இம்மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு மற்றும் முட்டைக்கோழி வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபடுகின்றனர். தமிழகத்தின் முட்டை மற்றும் கோழி இறைச்சி தேவையை இம்மாவட்டங்களே பெரும் பங்கு பூர்த்தி செய்கின்றன.
இப்பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றில் இருந்து நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளில் பெரும்பகுதி, உள்மாநிலத் தேவைக்கும் மீதமுள்ளவற்றில் பெரும்பகுதி கேரளா மாநிலத்திற்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலத்தில் சில கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டதால், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு முட்டை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, கோழிகளை கரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியால், இத்தொழில் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
எந்தளவிற்கு என்றால், பண்ணையாளர்கள் வியாபாரிகளிடம் முட்டைகளைக் கொடுத்து பணம் பெற்று வந்த நிலையில், இன்றைக்கு அவர்களே சாலையோரத்தில் நேரடியாக கடை போட்டு கூவிக்கூவி முட்டைகளை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளியுள்ளது. முட்டை மற்றும் கறிக்கோழி விலை கடுமையாக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியது: "கறிக்கோழி விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற வதந்திகளை மற்றவர்கள் பரப்ப பயப்படுவார்கள். கறிக்கோழி விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்களுக்கு தினமும் 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முட்டைக்கோழி பண்ணையாளர்களுக்கு 6 கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்படுகிறது.
இந்த இழப்பை சரிகட்டி தொடர்ந்து எவ்வாறு தொழில் செய்வது எனத்தெரியவில்லை. ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தியில் 50 ரூபாய் வரை நட்டம் ஏற்படுகிறது. இதனால் கறிக்கோழி உற்பத்தியை குறைத்துவிட முடிவு செய்திருக்கிறோம். பண்ணைகளில் குஞ்சுகளை விடுவதை குறைத்துக் கொள்ளவும் ஆலோசித்து வருகிறோம்." இவ்வாறு வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கு நோய்த்தடுப்பு மருந்து தெளித்த பிறகே அனுமதிக்கப்படுகிறது.
நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்துப் பண்ணைகளிலும் கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீர் தெளிக்கப்படுகிறது. வெளியாட்கள் பண்ணைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.