கொரோனாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மார்ச் 1ஆம் தேதி முதல் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தங்கள் ஊர்களுக்குத் திரும்ப வந்தவர்கள் பற்றிய விவரங்களைச் சம்பந்தப்பட்டவர்கள் தாங்களே முன்வந்து தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கத் தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 34, 36 வயதுள்ள இரு நபர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகச் சந்தேகத்தின் பெயரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, திமுக எம்பி ரவிக்குமாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நடைமுறைபடுத்த உள்ள நிலையில் நேற்று விழுப்புரம் நகரில் போக்குவரத்து குறைந்தது. ஹோட்டல்கள் குறைந்த அளவே திறந்திருந்தன. ’யாவரும் கேளிர்’ என்ற பொது நல அமைப்பினர் உணவு தயாரித்து நகரில் உள்ள பஸ் நிலையம், காந்தி சிலை உட்பட நகரின் முக்கிய இடங்களில் உணவின்றி தவித்த முதியோர்கள் ஆதரவற்றோர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.
சில இடங்களில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு என்ற பெயரில் சில தன்னார்வ அமைப்புகள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கை கழுவும் முறையைப் பொது மக்களுக்கு செயல்விளக்கம் செய்துகாட்டுவதாகக் கூறி கும்பல் சேர்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும். கூட்டம் சேரக் கூடாது என்று அரசு கடுமையாக வலியுறுத்தியும் கூட இது போன்ற தன்னார்வ அமைப்புகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற பெயரில் கும்பல் கூட்டுவதை நிறுத்த வேண்டும். இதில் காவல்துறை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் டூவீலர்களில் இளைஞர்கள் 3 பேர் 4பேர் எனக் கண்டபடி சுற்றுகிறார்கள் இப்படி டூவீலர்களில் செல்பவர்களைத் தடுத்து நிறுத்தி தேவையின்றி செல்பவர்களின் டூவீலரைப் பறிமுதல் செய்ய வேண்டும். இப்படி கடுமையாக காவல்துறை நடந்து கொண்டால்தான் வைரஸ் நோய் மேலும் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள்.
மக்கள் மீது அக்கரையுள்ள சமூக ஆர்வலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாமூர், கிளியனூர் பகுதிகளில் அரசு உத்தரவு படி வீடு வீடாகச் சென்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் யார் யார் என கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் காவல்துறை மருத்துவத்துறையைச் சேர்ந்த குழுவினர் வேன்களில் கிராமப்புறங்களில் தும்மல், இருமல் காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரிப்பதோடு அப்படிப்பட்டவர்கள் இருந்தால் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். காவல்துறை மற்றும் அதிகாரிகளும் நேரம் காலம் பாராமல் தங்கள் குடும்பத்தைப் பற்றி கூட கவலை இல்லாமல், அவர்கள் உயிரைப் பற்றிக்கூட கவலைப் படாமல் பணி செய்து வருகிறார்கள். அதை எல்லாம் உணர்ந்து ஒவ்வொரு மனிதனும் தங்களைத் தனிமைப்படுத்தி நோயற்ற மனிதனாக வாழ தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மேலும், மக்களின் கட்டுப்பாட்டை மக்களே முன்வந்து கடைப்பிடிப்பது கொஞ்சம் கடினமான ஒன்று. காவல்துறை இதைக் கடுமையாக்க வேண்டும். தயவு தாட்சண்யமின்றி கும்பல் கூடுவதை விரட்டியடித்து தடுக்கவேண்டும். போர் நடக்கும்போது வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பார்கள் மக்கள். அது கடந்த காலம். இப்போது கொரோனா என்ற வைரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் வெல்லப்போவது கொரோனா வைரசா? பொதுமக்களா?என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.