மூன்று புதிய வேளாண் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு விவசாயச் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
அதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில், பொது வேலைநிறுத்தம் முழுமையாக நடைபெற்றுவருகிறது. அனைத்துக் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி கண்டன உரையாற்றினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், புதுச்சேரியிலுள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும், அரசு ஊழியர் சம்மேளனமும், புதுச்சேரி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில், பாலாஜி திரையரங்கம் அருகில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ராஜா தியேட்டர் அருகில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மறியல் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.