வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம் கரோனா தடுப்புப் பணியில் உள்ள சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு ஒரு அவசர அறிவிப்பினை வெளியிட்டுள்ளர்.
அதில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நமது மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்படுகிறது:-
1. அனைத்து செக் போஸ்ட்களிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட வேண்டும். இ-பாஸ் இன்றி வரும் எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் மீது அதிகபட்ச கவனம் செலுத்தவேண்டும். சோதனைச்சாவடிகள் அனைத்தும் தீவிரக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவேண்டும். உரிய அலுவலர்கள் அனைவரும் தினசரி சோதனைச்சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
2. ஒவ்வொரு கிராமத்திலும், தண்டோரா போட்டும், ஆட்டோவில் மைக் வைத்தும் கீழ்க்கண்டவாறு எச்சரிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று சென்னையிலும், வேலூரிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. எனவே, சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்து, ஸ்வாப் டெஸ்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். சோதனையின் முடிவு வரும் வரையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. வெளியில் வந்தால், காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கல்லூரி விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது. அவ்வாறு தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்காதவர்கள் குறித்து, தெருவில், அண்டை வீடுகளில் மற்றும் அந்தப்பகுதியில் வசிப்பவர்கள், மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் ஆப் எண், 94980 35000 எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு, சென்னையிலிருந்து தகவல் தெரிவிக்காமல் வந்து தங்கி இருப்பவர்கள் மீது காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கல்லூரி விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது.
இந்த பொது அறிவித்தலை கிராம நிர்வாக அலுவலர்களாலும், கிராம பஞ்சாயத்து செயலாளர்களாலும், தண்டோரா மூலமாகவும், ஆட்டோவில் சென்று, மைக் மூலமாகவும், நகர்ப்புறப் பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி, மண்டல அதிகாரிகள் மூலமாகவும் இன்றுமுதல் உடனடியாக அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தச் செய்தி சென்று சேருமாறு அறிவித்தல் கொடுக்க ஆரம்பிக்கவேண்டும். இதில் ஒரு வார்த்தைகூட விடுபடாமல் பொதுமக்களுக்கு அறிவிக்க செய்ய வேண்டும்.
3. அனைத்து முதன்மைத் தொடர்பில் உள்ளவர்களும் (தொடக்க நிலை தொடர்பாளர்கள்), இரண்டாவது நிலைத் தொடர்பாளர்களின் பயண விவரம் அனைத்தும் 27-ஆம் தேதிக்குள் (சனிக் கிழமைக்குள்) முடிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ஸ்வாப் எடுத்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அனைத்துப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவது அந்தந்த பகுதி மருத்துவ அலுவலர். வட்டார வளர்ச்சி அலுவலர், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள் ஆகியோர் பொறுப்பாகும். ஒவ்வொரு வட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள துணை ஆட்சியர்கள் இவை அனைத்துக்கும் பொறுப்பாவார்கள். இந்தப் பணிகளில் சுணக்கம் காட்டும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.