கரோனா தொற்றிக்கொள்ளாமலே எத்தனை பீதியில் உழல்கிறார்கள் மக்கள்? தொற்றிக்கொண்டால் அதே கரோனா, மனிதர்களை என்ன பாடுபடுத்திவிடுகிறது தெரியுமா? விருதுநகரைச் சேர்ந்த மகேந்திரனும் கரோனா பாதிப்பினால் ரொம்பவும் நொந்துதான் போனார். நோய்த் தொற்றைக் காட்டிலும், அவரை ரொம்பவே ‘டிஸ்டர்ப்’ செய்தது, விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தரமற்ற உணவுதான்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட அந்த மூன்று நாட்களில், மிகவும் பொறுமையிழந்து நாக்கு ருசி தேட, அங்கிருந்து ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். விருதுநகர் காந்திபுரத்திலுள்ள வீட்டுக்கு மகேந்திரன் போக, கரோனா தொற்றின் தீவிரம் அறிந்த அந்தக் குடும்பத்தினர், அவரை அனுமதிக்கவில்லை. விருதுநகர் மேற்கு காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பிறகென்ன? அவரை மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டனர்.
தப்பி ஓடி வெளியில் திரிந்த அந்த 2 மணி நேரத்தில் மகேந்திரன் எங்கெங்கே சென்றார்? யார் யாரைப் பார்த்தார்? எதெதைத் தொட்டார்? என விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.