கரோனா வைரஸ் தொற்று என்கிற எவ்வளவு பெரிய ஆபத்துடன் மனித சமூகம் மோதி வருகிறது. இதில் சாதி, மதம் இல்லை. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்ற பேதம் இல்லை. எல்லோரும் ஒரணியில் நின்று கரோனா வைரஸ் கொடுங்கோலனை விரட்டுவதே சரியான பாதையாக இருக்க முடியும்.
ஆனால் இதிலும் அரசியல் பேதம் இருக்கிறதே என கவலையுடன் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான தோழர். திருப்பூர் சுப்பராயன். "கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, அதிலிருந்து மக்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அக்கறையுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என்றால் அதிகாரிகள் பேதம் இல்லாமல் நடக்க வேண்டும்.
மார்ச் மாதம் 25 மற்றும் 30ந் தேதி என திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் இரண்டு முறை கரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார்கள். இந்த இரண்டு கூட்டங்களிலுமே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான என்னை அழைக்கவில்லை. அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதில் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால் தொகுதி எம்பியான என்னை அவர்கள் அழைக்கவில்லை.
இங்கு மட்டுமல்ல பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் (திமுக) ஆய்வு கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. கோவை மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு கோவை எம்.பி. நடராஜன் (மார்க்சிஸ்ட்) அவர்களுக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு தொகுதி எம்.பி.யான ஆ. ராசாவையும் (திமுக) அழைக்கவில்லை. ஈரோடு மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி (மதிமுக) அவர்களையும் அழைக்கவில்லை.
ஏன் இந்த அரசியல் பாகுபாடு? அரசு நிர்வாகம் தடுப்பு நடவடிக்கை எடுத்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதுபற்றிய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டிய கடமை தொகுதி எம்.பி.களான எங்களுக்கு உண்டு. அரசு நிர்வாகம் என்பது அரசியல் கட்சி சார்பு உடையதல்ல. தொகுதி மக்களினுடைய பிரச்சனைகளை எடுத்துரைத்து அதை அரசு நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றால் அந்த ஆய்வுக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஏன் இந்த புறக்கணிப்பு? இது சட்டப்படி சரியானது அல்ல.
எனவேதான் தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள எடப்பாடி. பழனிசாமி அவர்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த தொகுதி எம்பிக்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கடிதம் எழுதி உள்ளேன். இந்த வைரஸ் தாக்கு என்பது மக்களிடையே பரவலான பீதியை ஏற்படுத்தியிருந்தாலும் அரசியல்ரீதியாக இவர்கள் இதுபோன்ற பாகுபாடு வைரஸை வைத்திருக்கக் கூடாது என்றார்.