சென்னையிலிருந்து போலி பாஸ் பயன்படுத்தி திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி ஆகிய ஊர்களுக்கு கட்டணம் வசூல் செய்து பயணிகளை அழைத்து வந்த வேனை புளியங்குடி போலீசார் மடக்கிப் பிடித்தனர். டிரைவர்கள் கைது செய்யப்பட்டு வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரோனா நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்பவர்களை தடுக்கும் வகையில், போலீசார் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர் அடங்கை மீறி வாகனங்களில் செல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காக மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரயாணம் செய்வதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் புளியங்குடி மெயின் ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அத்தியாவசியத் தேவை இல்லாமல் ரோட்டில் வரும் வாகனங்களை தடுத்து வழக்குப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பயணிகளுடன் வந்த ஒரு வேனை அவர்கள் தடுத்து நிறுத்தினர். அதில் 5 குழந்தைகள் உட்பட 21 பயணிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வேனை ஓட்டி வந்த டிரைவர்கள் நீதிபதி, வினோத் ஆகியோரை விசாரணை செய்தபோது அந்த வேன் பயணிகளை சென்னையிலிருந்து ஏற்றிக் கொண்டு துக்க நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் செல்வதாக கூறினர். ஆனால் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்களிடம் அதற்கான பாஸ் இருப்பதாக போலீசாரிடம் காண்பித்தனர். பாஸை பரிசோதனை செய்த போலீசார் அந்த பாஸ் 17ம் தேதிக்கு வழங்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அந்த டிரைவர்களிடம் விசாரித்தபோது அந்த பாஸ் போலியாக தயாரிக்கப்பட்டதாக கண்டறிந்தனர். உரிய முத்திரைகள் இல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் டிரைவர்களை கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திய போது அந்த வேனில் பயணம் செய்தவர்களிடம் தலா 3 ஆயிரம் ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு அவர்களை தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இறக்கி விடுவதற்காக அவர்கள் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. போலி பாஸ் மூலம் பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களை வேனில் அழைத்து வந்த டிரைவர்கள் இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அந்த வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அந்த வேனில் பயணம் செய்த ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேர் மற்றும் 2 டிரைவர்கள் புளியங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு வைரஸ் தொற்று சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நிலையில் போலி பாஸ் மூலம் பயணிகளை அழைத்து வந்த இந்த சம்பவம் தென்காசி மாவட்டப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.