கரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே தன்னுடைய நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உலா வருகின்ற கார்த்தி சிதம்பரம் எம்.பி. தான் மட்டுமல்லாது, தன்னுடையக் கட்சிக்காரர்களைக் கொண்டு தொகுதியிலுள்ள மக்களுக்குத் தேவையான மளிகை பொருட்கள், அரிசியை வழங்கி பசியாற்றிய அதே வேளையில், கரோனா வைரஸிலிருந்து எதிர்க்கொள்ள முகக்கவசம் மற்றும் கையுறை அவசியம் என சுகாதாரத்தை எதிர் கொள்வது குறித்தும் உரையாற்ற மறப்பதில்லை. முகக்கவசம், கையுறை இவைகளைப் பயன்படுத்தும் கார்த்தி சிதம்பரம், மற்றவர்களையும் உடனடியாக பயன்படுத்த தூண்டுகிறார். இதற்காகவே முகக்கவசத்தை தயார் செய்து தொகுதி முழுவதும் இலவசமாக விநியோகித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து முக்கவசம் தயாரிப்பதற்கான துணியையும் இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவர் இப்படியென்றால், அவருடைய மனைவியான டாக்டர் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரமோ," உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகள் குறித்து" சமூக வலைத்தளங்களில் விவரித்து வருகின்றார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் மஹபூப்பாளையம் பள்ளிவாசல் அருகே கரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி முழுவதும் லாக் செய்யபப்ட்டுள்ளது, எனவே லாகக் செய்யப்பட்ட பகுதியிலுள்ள 170 குடும்பத்தார்களுக்கு தேவையான உதவிகளை வழங்க கோரிக்கை வைத்திருந்தனர் அப்பகுதி ஜமாத்தார்கள்.
சனிக்கிழமை மாலை வேளையில் அதற்கான நிகழ்ச்சி என அறிவிக்கப்பட்டிருக்க, காரைக்குடி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.ராமசாமி, எம்.பி.கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் முகக்கவசம், கையுறை அணிந்து வந்திருந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள், அங்கிருந்தோர்கள் அனேகர் முகக்கவசம் இல்லாமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டென்சனாகிவிட்டார் கார்த்தி சிதம்பரம்.
" ஏம்பா.! உனக்கு என்ன குறை..? மாஸ்க் போடாமல் இருக்க.. போய் உடனே மாஸ்க் போட்டுட்டு வா..!" என ஒருவரை பார்த்து அதட்ட, ஏனையோர் அவசர அவசரமாக மாஸ்க் போட்டுவிட்டு அமர்ந்தனர். இதே வேளையில், நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-சுந்தரம் வந்து அமர, " ஏங்க.!!! மாஸ்க் எங்கே..?" என அவரிடமும் கேட்க, அவரோ மாஸ்க் கிடைக்காமல் இங்கும் அங்கும் அல்லாட, தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தான் வைத்திருந்த மாஸ்க்கை அவரிடம் கொடுக்க, சலசலப்பு சரியானது.