பிரபல ரவுடி ஸ்ரீதரின் மகள் மீதான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் மீது கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க, ஐக்கிய அரேபிய அமீரகத்துக்குச் சென்ற ஸ்ரீதர், 2017- ஆம் ஆண்டு மரணமடைந்தார். முன்னதாக, குற்றச்செயல்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக, ஸ்ரீதர், அவரது மனைவி, மகள் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப்பிரிவு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தனலட்சுமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சொத்துகள் பற்றி மனுதாரருக்கு எதுவும் தெரியாது என வாதிட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரர் பெயரில் உள்ள 19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், குற்றச்செயல்களின் மூலம் சம்பாதித்தவை என்பதை அமலாக்கப் பிரிவு குறிப்பிட்டுள்ளதாகக் கூறி, வழக்கை ரத்து செய்யக் கோரிய தனலட்சுமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சொத்து சேர்க்கும் எண்ணத்துடன் இன்று பலர் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அதைத் தடுக்கும் பொருட்டு, கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் வகையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டம் உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.