கரோனா வைரஸ் 175 நாடுகளுக்கு மேல் பரவி உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 500 பேரை தாண்டியுள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 15 ஆக அதிகரித்துள்ளது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள சூழ்நிலையில் வேலையில்லாமல் இருக்கும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள், ஆலைத்தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணமாக மூன்று ஆயிரம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
பின்னர் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழக்குவதாக தெரிவித்த அவர், கிருமி நாசினிகள், கையுறைகள் போன்றவற்றை போர்க் கால அடிப்படையில் தயாரிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதுமுள்ள சிறைக் கூடங்களில் இருக்கும் சிறிய குற்றவாளிகளை விசாரணையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.