குமரிக்கடல் பகுதியில் நீண்ட நிலை கொண்ட வலுவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்வதால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. இதனால் வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தற்போது நாகை வேதாரண்யம், கரியாப்பட்டினம், கோடியகரை, கள்ளிமேடு, ஆயக்காரன்புலம், செம்போடை பகுதியில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில், வந்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் காரியாபட்டி, ஆவியூர், மீனாட்சிபுரம், வணங்காங்குண்டு, தோணுகால், கல்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடியில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அதேபோல் கொடைக்கானல் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மழை காரணமாக ராமநாதபுரம், தேனி, விருதுநகர், திண்டுக்கல், மதுரையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் அடியாகவும், வெளியேற்றம் 25,600 கன அடியாகவும் உள்ளது.