திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஓரு மாதத்தில் மட்டும் சுமார் 767 பேர் வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலை வந்துள்ளார்கள். அவர்களில் 79 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள், மீதி 696 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதில் 171 பேர் துபாயில் இருந்து வந்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிப்பதற்காக ஒன்றியம் வாரியாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை அந்த குழு கண்காணிக்கும். அதோடு ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பதைத் தெரியப்படுத்தும் விதமாக தினமும் புகைப்படம் எடுத்து அதில் அனுப்ப வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் வீட்டின் முன்பு சிவப்பு கலர் நோட்டீஸ், வீட்டைச் சுற்றி மஞ்சள் கலர் நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, "திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை ஒரு கரோனா நோய்க்கு யாரும் சிகிச்சை பெறவில்லை. திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா நோய் தாக்கி யாராவது வந்தால் அவர்களுக்கு சிகிச்சையளிக்க வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்ட அரசு இணையத்தளத்தில், கரோனா வைரஸ்சை தடுப்பு பணியில் ஈடுப்பட விரும்பும் தன்னார்வலர்கள் பதிவு செய்தால் அவர்களை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்" என்றார்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.